ஷா ஆலம், பிப். 15- மக்களின் நலன் காக்கும் மாநில அரசின் திட்டங்களுக்கு உதவும் வகையில் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் கடந்தாண்டு முழுவதும் 10 கோடி வெள்ளிக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது.
சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டம் (பி.டி.ஆர்.எஸ்.) உள்பட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்கு இந்தத் தொகையில் 7.2 கோடி வெள்ளி செலவிடப்பட்டதாக அதன் குழு தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
மாநில அரசின் துணை நிறுவனமான எம்.பி.ஐ. மாநில அரசுக்கு சுமார் 2 கோடி வெள்ளியை வழங்கியதோடு நிறுவன சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்.) திட்டங்களையும் மேற்கொண்டது என டத்தோ சாய்போலியாசான் மாட் யூசோப் கூறினார்.
கடந்த ஆண்டு எம்.பி.ஐ. மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஸக்கத் தொகையாக 1.1 கோடி வெள்ளி செலுத்தின. ஆகவே, எம்.பி.ஐ. வருமானத்தில் 10 கோடிக்கும் அதிகமான தொகை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநிலத்திற்கு வழங்கப்பப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு செத்தியா ஆலமில் உள்ள செத்தியா சிட்டி மாலில் நடைபெற்ற ஊடகப் பாராட்டு இரவு விருந்து நிகழ்வின் போது அவர் இவ்வாறு கூறினார். எம்.பி.ஐ. அறக்கட்டளையின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதற்கிடையே, வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் 80 லட்சம் வெள்ளி இலக்கை அடைவதை தமது தரப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சாய்போல்யாசா கூறினார்.








