ஷா ஆலம், பிப். 15- புஞ்சா ஆலமில் உள்ள ஆலம் ஜெயா வர்த்தக மையத்தில் அந்நிய நாட்டினர் நடத்தி வந்த நான்கு கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் நேற்று மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் அக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
மலேசிய நிறுவன ஆணையம் (எஸ்.எஸ்.எம்.) மலேசிய சுங்கத் துறையின் மத்திய மண்டலத்தின் இரண்டாம் பிரிவு (சிலாங்கூர்) ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் இரு உணவகங்கள் மற்றும் இரு கார் கழுவும் மையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 35 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு கொண்டதாக அவர் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
காலை 10.00 மணி தொடங்கி நான்கு மணி நேரத்திற்கு நடைபெற்ற இந்த சோதனையில் லைசென்ஸ், விளம்பரம், நடைபாதையை ஆக்கிரமித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 12 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதோடு பல வர்த்தகப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அது கூறியது.
ஊராட்சி மன்றங்கள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை கடைபிடிப்பதில் வர்த்தகர்களுக்கு குறிப்பாக அந்நிய நாட்டினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இத்தகைய கடும் நடவடிக்கைகள் பெரிதும் துணை புரியும் எனத் தாங்கள் நம்புவதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.
வட்டார மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இத்தகைய சோதனை நடவடிக்கைள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் நகராண்மைக் கழகம் கூறியது.








