சுங்கை பட்டாணி, பிப். 12 - தைப்பிங் சிறையில் கடந்த மாதம் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததாக செய்யப்பட்ட புகார் தொடர்பான விசாரணை தொடர்கிறது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
போலீசாரால் விசாரணை கோப்பு திறக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் சொன்னார்.
இச்சம்பவம் நிகழ்ந்த தினத்தில் (ஜனவரி 17) பணியில் இருந்த சிறை அதிகாரிகள் (வார்டன்கள்) கைதிகள் உள்பட யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் வாக்குமூலங்களை பதிவு செய்வதும் இந்த நடவடிக்கையில் அடங்கும். இந்த விசாரணை நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று சுங்கை பட்டாணி சிறைச்சாலைக்கு மேற்கொண்ட பணி நிமித்த வருகையின் ஒரு பகுதியாக கைதிகளின் தைப்பூச சந்திப்பு மற்றும் வாழ்த்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
தைப்பிங் சம்பவம் குறித்து கருத்துகளைப் பெற நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு உள்துறை அமைச்சை அழைத்துள்ளதாக சைபுடின் மேலும் தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஹிஷாமுடின் முகமது யூனுஸும் என்னைத் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால் இந்த செயல்முறை முறையாவும் படிப்படியாகவும் செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
சிறைச்சாலைத் துறை எப்போதும் தனது பொறுப்புகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவதும், ஒரு சம்பவத்தை விசாரிப்பதில் அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவதும் முக்கியம் என்று அவர் கூறினார்.
கடந்த ஜனவரி 17 ஆம் தேதி நிகழ்ந்த கைதியின் மரணம் குறித்த புகாரைத் தாங்கள் பெற்றுள்ளதாகவும் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இதன் தொடர்பில் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதாகவும் பேராக் மாநில காவல்துறைத் தலைவர் டி.சி.பி. சுல்காப்ளி ஷரியட் முன்னதாக கூறியிருந்தார்.


