ஷா ஆலம், பிப். 11- உலு சிலாங்கூர், கெர்லிங்கில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசு சார்பில் ஒரு லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது.
தைப்பூச விழாவை முன்னிட்டு மாநில அரசு சார்பில் நேற்றிரவு ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆலய நிர்வாகத்திடம் இந்த மானியத்தை வழங்கினார்.
இந்த மானியம் ஆலயத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உதவும் அதேவேளையில் பக்தர்கள் சமயப்பணிகளை செளகர்யமான முறையில் மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினையும் ஏற்படுத்தும் என ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.
இந்த கோவிலின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு 20,000 உதவியை வழங்கியுள்ளது என்று வீ.பாப்பாராய்டு தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
முன்னதாக, பத்துமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தைப்பூச தின கொண்டாட்டத்திற்கு டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி தலைமை தாங்கினார்.
பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் கலந்து கொண்ட விழாவில் கோம்பாக், உலு சிலாங்கூர் மற்றும் கோல சிலாங்கூரிலுள்ள 61 கோயில்களுக்கு மொத்தம் 561,000 வெள்ளியை மானியமாக அவர் வழங்கினார்








