MEDIA STATEMENT

சிலாங்கூரிலுள்ள  தீம் பார்க் நடத்துநர்கள் எஸ்.ஒ.பி. விதிகளைப் பின்பற்ற வேண்டும்- டத்தோ இங் வலியுறுத்து

10 பிப்ரவரி 2025, 4:41 AM
சிலாங்கூரிலுள்ள  தீம் பார்க் நடத்துநர்கள் எஸ்.ஒ.பி. விதிகளைப் பின்பற்ற வேண்டும்- டத்தோ இங் வலியுறுத்து

கோல குபு பாரு, பிப். 10 - சிலாங்கூர் மாநிலத்தில்   தீம் பார்க் எனப்படும் கேளிக்கை மையங்களை நடத்துவோர் வருகையாளர்களின் பாதுகாப்புக்கு  முன்னுரிமை அளிப்பதற்கு ஏதுவாக  அதிகாரிகள் நிர்ணயித்த சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாகப் பின்பற்றி நடக்குமாறு நினைவூட்டப்பட்டுள்ளனர்.

விதிமுறை அமலாக்கத்திலிருந்து எந்தவொரு தீம் பார்க்கிற்கும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை எனக் கூறிய ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான ஆடசிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம், ஐ-சிட்டியில் அண்மையில் நிகழ்ந்த சம்பவத்தை  உதாரணம் காட்டினார்.

அனைத்து தீம் பார்க் நடத்துபவர்களும் பாதுகாப்பை புறக்கணிக்க வேண்டாம் என்பதோடு ஊராட்சி மன்ற  அதிகாரிகள் நிர்ணயித்த எஸ் ஒ.பி. விதிகளை  கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

தேவையற்ற சம்பவங்கள் நிகழ்வதைக்  காண நாங்கள் விரும்பவில்லை. பின்னர் ஊராட்சி மன்றங்கள்  குறை கூறலுக்கு ஆளாக வேண்டி வரும். ஆகவே, இந்த விஷயத்தை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள தாசேக் பிரேசர் வெலியில் 2025 மீன்பிடி விழாவைத் தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைக் கூறினார்.

சிலாங்கூர்  மாநில் டூரிசம் சிலாங்கூர் தலைமை செயல்முறை  அதிகாரி சுவா யீ லிங்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்

இது குறித்து மேலும் கருத்துரைத்த இங்,  தேவையான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் வரை ஐ-சிட்டியில் உள்ள கண்ணாடி நீர் சறுக்கு விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்படாது என்றார்.

மாநில அரசு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை. ஏனெனில் ஒப்புதல் என்பது திட்டமிடல் அனுமதி மற்றும் கட்டிட அனுமதி உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான நடத்துநர்களின்  முயற்சிகளைப் பொறுத்தது என்றார் அவர்.

அது அவர்களின் விருப்பம். அவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்காத வரை நாங்கள் அவர்களை செயல்பட அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இழப்புகளை எதிராகொள்ளத் தயாராக இருந்தால் அது அவர்களின் முடிவு என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, மெனாரா ஸ்கை சிட்டி, ஐ-சிட்டியில் 60 மீட்டர் உயரமும் 600 மீட்டர் நீளமும் கொண்ட கண்ணாடி நீர் சறுக்கிலிருந்து ஒரு மிதவை விழுந்து பார்வையாளர்களைத் தாக்கிய சம்பவத்தை சித்தரிக்கும்  18 வினாடி காணொளி வைரலானது.

இந்த சம்பவம்  தீம் பார்க்கில் உள்ள சுற்றுலா தலங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை  பொதுமக்களிடையே ஏற்படுத்தியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.