கோல லங்காட், பிப். 9- முஸ்லீம் அல்லாதோரின் விழாக்களில் கலந்து கொள்வது தொடர்பில் முஸ்லீம்களுக்கு வழிகாட்டியை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று உறுதிப்படக் கூறிய மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவுக்கு மாநில அரசு நன்றி தெரிவித்துள்ளது.
சொந்த சமய நம்பிக்கை மற்றும் மதிப்புக் கூறுகள் மீது வலுவான நம்பிக்கையைக் கொண்டுள்ள கௌரமிக்க சமூகத்தின் அடிப்படைத் துண்களாக பன்முகத் தன்மை நீண்ட காலமாக விளங்கி வருகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இது வெறும் சகிப்புத்தன்மை தொடர்பான விஷயம் மட்டுமல்ல. சிலாங்கூரைப் பொறுத்த வரை நாம் இன மற்றும் சமய வேறுபாடின்றி வலுவமான ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வை பேணிக் காத்து வருகிறோம் என அவர் சொன்னார்.
கடந்தாண்டு நாம் அபரிமித பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்ததற்கு இது அடித்தளமாக விளங்கியது என்று ஜென்ஜாரோமில் நேற்றிரவு நடைபெற்ற மாநில நிலையிலான சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவர் தெரிவித்தார்.
ஜென்ஜாரோம், ஃபூ குவாங் ஷான் டோங் ஜென் ஆலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் ஹாஜ்ஜா நோராஷிகின் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
முஸ்லீம் அல்லாதோரின் சமய நிகழ்வுகளில் முஸ்லீம்கள் கலந்து கொள்வது தொடர்பில் வழிகாட்டியை உருவாக்கும் பரிந்துரையில் தாம் உடன்படவில்லை என்று சுல்தான் நேற்று கூறியிருந்தார்.
நாட்டின் ஒற்றுமைக்காக மக்கள் நல்லெண்ணத்தை தீவிரமாக வளர்த்து வரும் இவ்வேளையில் இத்தகைய பரிந்துரையை முன்வைப்பது அவசியமற்றது என சுல்தான் கருதுவதாக சிலாங்கூர் இஸ்தான ஆலம் ஷா அரண்மனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.



