ஷா ஆலம், பிப். 1- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தை தரம் உயர்த்துவதற்கு ஏதுவாக அத்திட்டம் தொடர்பான கொள்கைகளை மாநில அரசு மறுஆய்வு செய்து வருகிறது.
மலாயா பல்கலைக்கழகத்தின் சமூக நல்வாழ்வு ஆராய்ச்சி மையத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.
இந்த பிங்காஸ் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போதிலும் (காசே ஈபு ஸ்மார்ட் சிலாங்கூர்-கிஸ்) மக்களின் சமூக பொருளாதாரத் தரத்தை உயர்த்த வேறு வடிவிலான உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து நாம் ஆராய வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
மீடியா சிலாங்கூர் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற பிச்சாரா செமாசா எனும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆய்வின் முடிவுகள் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் ஆய்வரங்கு ஒன்றில் இத்திட்ட பங்களிப்பாளர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
சமூக நல ஆராய்ச்சி மையத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளும் இத்திட்டம் பிங்காஸ் தொடர்பான சிறப்பான கொள்கையை நாம் உருவாக்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.
கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் இடம் பெற்றுள்ள 46 முன்னெடுப்புகளில் இந்த பிங்காஸ் திட்டமும் ஒன்றாகும். ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம் (கிஸ்) மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான கிஸ்-ஐ.டி. திட்டங்களுக்கு மாற்றாக இந்த பிங்காஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பிங்காஸ் திட்டத்தின் வாயிலாக மேலும் அதிகமான மக்கள் பயன் பெறும் வகையில் அந்த திட்டத்திற்கான குடும்ப வருமான வரம்பு 3,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டது.








