வாஷிங்டன் ஜன. 31- பிராந்திய சேவையில் ஈடுபட்டிருந்த பயணிகள் விமானம் வாஷிங்டன் விமான நிலையத்தில் இராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதற்கான தெளிவான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்த விபத்தில் 67 பயணிகள் கொல்லப்பட்ட வேளையில் அந்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகிறது.
கூட்டரசு அரசின் பன்முகத்தன்மை முயற்சிகள் இந்த விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என அதிபர் டோனால்ட் டிரம்ப் கூறினார். எனினும் அதற்கான ஆதாரங்களை அவர் முன்வைக்கவில்லை.
தாம் ஏற்கவிருக்கும் அதிபர் பதவி இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என டிரம்ப் வலியுறுத்தியுள்ள நிலையில் இந்த பேரிடரை அவர் அரசியலாக்குவதாக இடதுசாரிகளும் ஜனநாயக க் கட்சியினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அறுபது பயணிகள் மற்றும் நான்கு விமானப் பணியாளர்கள் பயணம் செய்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போம்பார்டியர் ரக விமானம் தரையிறங்கத் தயாரான வேலையில் இராணுவத்திற்குச் சொந்தமான பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் மோதி பொட்டோமேக் ஆற்றில் விழுந்தது.
இந்த விமான விபத்து தொடர்பான விசாரணை தற்பொது தொடங்கியுள்ள நிலையில் இவ்விபத்தில் இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப் படவில்லை.
விபத்துக்குள்ளான அந்த விமானம் வழக்கமான பயண பாணியில் பயணித்தாகவும் தொடர்பில் எந்த பிரச்சினையும் எழவில்லை என்றும் அமெரிக்க போக்குவரத்து அமைச்சர் சீன் டஃபி கூறினார்.
கடந்த புதன்கிழமை இரவு நிகழ்ந்த இந்த விபத்துக்குப் பின்னர் நேற்று பிற்பகல் வரை மொத்தம் 40 பயணிகளின் உடல்களை மீட்புக் குழுவினர் ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.


