MEDIA STATEMENT

கிசிஞ்சானில் வரும் சனிக்கிழமை மாநில அரசின் பொங்கல் விழா- பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டுகோள்

30 ஜனவரி 2025, 7:58 AM
கிசிஞ்சானில் வரும் சனிக்கிழமை மாநில அரசின் பொங்கல் விழா- பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டுகோள்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், ஜன. 30- சிலாங்கூர் மாநில அரசு நிலையிலான 2025 பொங்கல் விழா வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சனிக்கிழமை சிகிஞ்சானில் நடைபெறவுள்ளது.

இரு பிரிவுகளாக நடத்தப்படும் இந்த விழாவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைப்பார் என்று லீமாஸ் எனப்படும் பௌத்த, கிருஸ்துவ, இந்து, தாவோ சமயங்களுக்கான சிறப்புச் செயல்குழுவின் இணைத் தலைவர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

பொங்கல் விவசாயத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு விழாவாகவும் உழவர் திருநாளாகவும் விளங்கும் காரணத்தால் இவ்வாண்டு பொங்கல் விழாவை நெல் விளையும் பூமியான சிகிஞ்சானில் நடத்த தாங்கள் முடிவெடுத்ததாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இந்த பொங்கல் விழாவின் முதல் நிகழ்வு சிகிஞ்சான், சுங்கை பூரோங், பாரிட் 4, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலைகள் சார்ந்த அங்கங்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்படும்.

அன்றைய தினம் இரவு 7.00 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெறும் விருந்துடன் கூடிய பொங்கல் நிகழ்வுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்பார். இந்த நிகழ்வில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு பிரமுகர்களும் கலந்து கொள்வர் என்றார் அவர்.

இந்த பொங்கல் விழாவின் சிறப்பு அங்கமாக மூத்த குடிமக்களுக்கு மந்திரி புசார் புடவைகளை அன்பளிப்பாக வழங்குவார் என்றும் பாப்பாராய்டு தெரிவித்தார்.

காலையில் நடைபெறும் கலை,கலாசாரப் போட்டிகளில் 1,500 பேர் வரையிலும் இரவு மந்திரி புசார் தலைமையில் நடைபெறும் பிரதான நிகழ்வில் 3,500 பேர் வரையிலும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.