ஷா ஆலம், ஜன. 30- சிலாங்கூரில் பரம ஏழ்மை முற்றாகத் துடைத்தொழிப்பதற்கான முயற்சிகளை மாநில அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வரும்.
மாநிலத்தில் பரம ஏழ்மையை ஒழிக்கும் மாநில அரசின் இலக்கு ஏறக்குறைய அடையப்பட்டுள்ள நிலையில் பகாங் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களைப் போல் இங்கும் மிக வறிய நிலையை சுழியம் நிலைக்கு கொண்டு வரும் நம்பிக்கையில் மாநில அரசு உள்ளது என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
சிலாங்கூரில் 20,000 பேராக இருந்த பரம ஏழைகளின எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. பரம ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி அனைத்து அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களை நான் பணித்துள்ளேன் என்று அவர் சொன்னார்.
நடப்பிலுள்ள அரசாங்கம் என்ற முறையில் எங்களின் முயற்சிகள் பலனளிப்பதை உறுதி செய்ய சரியான திட்டங்கள் அல்லது இலக்கு நமக்கு இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் இங்கு நடைபெற்ற பெட்டாலிங் மாவட்ட நிலையிலான ஐ-சீட் வர்த்தக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வறுமை ஒழிப்பு என்பது ஒரு நீண்ட கால நடவடிக்கை என்பதோடு மக்களும் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு போதிய விழிப்புணரவைக் கொண்டிருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கல்வியின் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வாயிலாக அவர்கள் தங்களின் அறிவாற்றலையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதன் மூலமாக மட்டுமே அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இயலும். அதே சமயம், இளையோர் வேலை வாய்ப்புச் சந்தையில் அதிகத் தேவை ஏற்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), விண்வெளி, வான் போக்குவரத்து போன்ற அதிகத் தாக்கம் கொண்டத் துறைகளில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.








