(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜன. 26- ஷா ஆலம் மாநகர் மன்ற இந்தியப் பணியாளர்கள் சமூக நல அமைப்பின் (பாக்கி) ஏற்பாட்டில் 2025 பொங்கல் விழா இங்குள்ள செக்சன் 25 தாமான் ஸ்ரீ மூடா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பாப்பராய்டு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் ஆகியோர் இந்த விழாவுக்கு சிறப்பு வருகை புரிந்தனர்.
ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்களான ராமு நடராஜன், திருமதி யோகேஸ்வரி சாமிநாதன், நத்தின்ட்ரன் ராஜ் பாஸ்கரன், முருகையா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.![]()
இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு பிரமுகர்கள் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டதோடு அவர்களுக்கு ஏற்பாட்டுக் குழு சார்பில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
இந்த பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம் மற்றும் கரகாட்டம் ஆகியவையும் இடம் பெற்றன.
இந்த நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட தோரணம் பின்னும் போட்டி, வர்ணம் தீட்டுதல், உரியடித்தல், கோலமிடுதல் உள்ளிட்டப் போட்டிகளில் பாக்கி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பாக்கி அமைப்பின் தலைவர் எஸ்.தங்கராஜூ தலைமையிலான நிர்வாகக் குழுவினர் இந்த நிகழ்வுக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
எண்பதற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் இந்தியப் பணியாளர்கள் சமூக நல அமைப்பு பணியாளர்களின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதோடு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளையும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வருகிறது.







