MEDIA STATEMENT

ஐ-சீட் விண்ணப்பங்களுக்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்படும்- பாப்பாராய்டு அறிவிப்பு

22 ஜனவரி 2025, 3:28 AM
ஐ-சீட் விண்ணப்பங்களுக்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்படும்- பாப்பாராய்டு அறிவிப்பு

(ஆர்.ராஜா)

பந்திங், ஜன. 22- சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) வாயிலாக வர்த்தக உபகரணங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்படும்.

இந்த திட்டத்தில் பங்கேற்போர் குறைந்தது ஓராண்டு காலம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும், வர்த்தகம் செயல்பாட்டில் இருக்க வேண்டும், மாதம் வருமானம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக இருக்க வேண்டும் ஆகியவை இந்த உபகரண உதவிக்கான விண்ணப்பங்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளில் இனி கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

இந்திய சமூகத்தின் மத்தியில் வறுமையை ஒழிப்பது மற்றும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் வர்த்தகத்தில் ஈடுபட்டு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவுவது உள்ளிட்ட அடிப்படை நோக்கங்களிலிருந்து இந்த திட்டம் விலகாமலிருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக  அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள பந்திங் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற கோல லங்காட் மாவட்ட நிலையிலான ஐ-சீட் வர்த்தக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் கீழ் 22 சிறு தொழில்முனைவோர் 170 உதவிப் பொருள்களைப் பெற்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற்றவர்கள் முறையாக தங்கள் வர்த்தகத்தை தொடர்வதை உறுதி செய்வதற்காக ஐ-சீட் பொறுப்பாளர்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அவர்களின் வர்த்தக வளாகங்களுக்கு வருகை மேற்கொண்டு சோதனை மேற்கொள்வர். 

அவர்கள் வர்த்கத்தை தொடராதது, அல்லது பொருள்களை  அப்படியே வைத்திருப்பது, இடம் மாற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டு பிடிக்கப்பட்டால் அப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு தேவைப்படும் மற்றவர்களுக்கு வழங்கப்படும் என்றார் அவர்.

இத்திட்டத்தில் பங்கு பெறுவதற்கு குடும்ப வருமானம் 3,000 வெள்ளிக்கு  குறைவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளதால் மளிகைக்டை போன்ற வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

இந்த பொருள்களை  முழுமையாகப் பயன்டுத்திக் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண்பதற்கான வழிவகைகளை ஆராயுங்கள். இத்தகைய உதவிகளை மாநில அரசு தொடர்ந்து வழங்கப்படும். 

மாநிலத்தில் ஏழ்மையை ஏழ்மையை ஒழிக்கும் நோக்கில் ஐ-சீட் மற்றும் புளுபிரிண்ட் எனப்படும் வறுமை ஒழிப்பு பெருந்திட்டத்தை மாநில அரசு உருவாக்கியுள்ளது.  சிலாங்கூரில் ஏழைகள் பட்டியலில சுமார் 22,000 பேர் உள்ளனர்.  மத்திய மற்றும் மாநில அரசுகள் வாயிலாக வர்த்தக உபகரணங்கள் வழங்குவது போன்ற இத்தகைய திட்டங்கள் மூலம் மூலதன உதவி, பயிற்சிகள் வழங்குவதன் அவர்களை வறுமையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றம் தொகுதிகளில் உள்ள இந்திய கிராமத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களை அணுகி இந்த உதவிப் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். எனினும், தகுதியின் அடிப்படையில்தான் இப்பொருள்கள் வழங்கப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த நிகழ்வில் கோ ஹிஜ்ரா பொது நிர்வாகி டத்தோ முகமது ஸூக்ரி இஸ்மாயில், கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி மற்றும் கோல லங்காட் வட்டார இந்திய சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.