கோலாலம்பூர், ஜன. 18- கடந்த மாதம் 31ஆம் தேதி இரவு சுபாங் ஜெயா, பண்டார் சன்வேயில் நடைபெற்ற புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது உயிரிழந்த நால்வரின் இரத்தத்தில் தடை செய்யப்பட்ட வஸ்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் போதைப் பொருளை உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பெறப்பட்ட இரசாயன அறிக்கையின் அடிப்படையில் இந்த விஷயம் உறுதிப்படுத்தப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவர்களின் நண்பர்கள், இசை நிகழ்ச்சி பணியாளர்கள் உள்பட 52 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பண்டார் சன்வேயில் நடைபெற்ற புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நால்வருக்கு ஏற்பட்ட மரணத்திற்கு போதைப் பொருளைப் பயன்படுத்தியது காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் முன்னதாக கூறியிருந்தார்.








