சிரம்பான், ஜன. 18- நான்கு மாநிலங்களில் நிகழ்ந்த 19 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நெகிரி செம்பிலான், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் சுய சேவை சலவை நிலையங்களில் கொள்ளையிடுவது மற்றும் வாகனங்களைத் திருடுவது போன்ற குற்றங்களைப் புரிந்துள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமது ஹாத்தா சே டின் கூறினார்.
கடந்தாண்டு முதல் இம்மாதம் வரை நிகழ்த்திய கொள்ளைச் சம்பவங்களில் அவர்கள் சுமார் 117,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்களை அவர்கள் கொள்ளையிட்டுள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி விடியற்காலை 2.30 மணியளவில் தனது கடையில் நிகழ்ந்த கொள்ளை தொடர்பில் கேஃபே நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அவ்விரு ஆடவர்களும் சிலாங்கூர் மாநிலத்தின் செர்டாங்கில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கடையின் பின்புறக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த ஆடவன் ஒருவன் அதன் முகப்பிடப் பகுதியில் அலசி ஆராயும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக அவர் சொன்னார்.
அக்கொள்ளையர்கள் போலி எண் பட்டை பொருத்தப்பட்ட புரோட்டோன் எக்ஸோரா காரைப் பயன்படுத்தியது முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபருக்குச் சொந்தமான புரோட்டோன் எக்ஸோரா கார், பேராக் மாநிலத்தின் ஊத்தாங் மெலித்தாங்கில் திருடு போனதாக புகார் செய்யப்பட்ட பெரேடுவா அத்திவா கார், வீட்டை உடைக்கப் பயன்படும் உபரணங்கள், திருடப்பட்ட பொருள்கள் இச்சோதனையின் போது கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.








