ஷா ஆலம், ஜன. 18- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை விரிவாக்கம் செய்வதில் சிலாங்கூர் தொடர்ந்து முன்மாதிரி மாநிலமக விளங்கும்.
சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டு வரும் வியூக நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ட்ரெய்ல்பிளேஸர்ஸ் திட்டமும் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஏ.ஐ. செயலியை உருவாக்குவதில் சிலாங்கூர் கூகுள் நிறுவனத்துடன் ஒத்துழைக்கும். அதே வேளையில் உயர் தரத்திலான ஏ.ஐ. பயிற்சி மற்றும் கல்வியை வழங்குவதற்கு ஏதுவாக இன்குபேட்டர் ஏ.ஐ. சிலாங்கூர் மையத்தையும் அது உருவாக்கி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பூச்சோங் மற்றும் சைபர் ஜெயாவில் செமிகண்டக்டர் ஐ.சி. வடிவமைப்பு பூங்காவை உருவாக்குவதன் மூலம் கணினி சில்லு தொழில்துறையை மேலும் விரிவாக்கும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
இது தவிர, பாயோங் சோலார் ஃபார்ம் மற்றும் கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் திட்டங்கள் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்கத்திற்கான வாய்ப்புகளையும் அது கண்டறிந்து வருகிறது என்றார் அவர்.
வரும் காலங்களில் சிலாங்கூர் பொருளாதார அலைக்கு உத்வேகம் அளித்து தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் வாயிலாக மலேசியா மற்றும் உலக பொருளாதாரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சொன்னார்.
மாநில அரசின் சேவைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சியாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உட்படுத்திய வெள்ளை அறிக்கையை மாநில அரசு அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யும் என்று மந்திரி புசார் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.








