உலக மனுக்குல வரலாற்றில் ஒரே நோக்கத்திற்காக மிக அதிகமான கூட்டம் திரளும் நிகழ்வாக இந்த கும்பமேளா திகழ்கிறது.
உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழாவான இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் தவிர உள்நாடு மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 கோடி சுற்றுப் பயணிகளும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது.
பௌஷ் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மகா கும்பமேளாவின் முதல் நாள் புனித நீராடல் தொடங்கும். திரிவேணி சங்கமம் என்ற கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் இடத்தை சுற்றியே மகா கும்பமேளா நடைபெறுகிறது. மகா கும்பமேளாவின் முதலாவது புனித நீராடல் தினமான இன்று பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜின் மூன்று நதிகளின் சங்கமத்துக்கு வந்துள்ளனர்.
மூன்று நதிகளின் சங்கமத்தில் சனிக்கிழமை முதல் 85 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர். சனிக்கிழமையன்று மட்டும் 35 லட்சம் பேர் புனித நீராடி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று 50 லட்சம் பேர் புனித நீராடி உள்ளனர்.
இந்த நிகழ்வில் கூட்டத்தைக் கட்டுபடுத்த 40,000 காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
4,000 ஹெக்டருக்கு மேல் பரந்து விரிந்துள்ள தற்காலிக நகரத்தில் பக்தர்களை தங்க வைப்பதற்காக 150,000 கூடாரங்கள் ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 3,000 சமையலறைகள், 145,000 ஓய்வறைகள் மற்றும் 99 வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றையும் இந்த நகரம் கொண்டுள்ளது








