MEDIA STATEMENT

பத்தாண்டுகால கனவு நனவானது- 404 தோட்டத் தொழிலாளர்கள் பி.பி.ஆர். வீடுகளைப் பெற்றனர்

14 ஜனவரி 2025, 4:05 AM
பத்தாண்டுகால கனவு நனவானது- 404 தோட்டத் தொழிலாளர்கள் பி.பி.ஆர். வீடுகளைப் பெற்றனர்

சிப்பாங், ஜன. 14- இங்குள்ள அம்பார் தெனாங் மக்கள் வீட்டுடமைத் திட்டம் (பி.பி.ஆர்.) வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் வீடமைப்பு திட்டமிடல் பிரிவிடமிருந்து தேசிய வீடமைப்பு இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதன் வழி புத்ரா ஜெயா மற்றும் சைபர் ஜெயா நிர்வாகத் தலைநகர் திட்டத்திற்கு வழி விடும் வகையில் தங்கள் இருப்பிடங்களை இழந்த 404 தோட்டத் தொழிலாளர்கள் சொந்த வீடுகளைப் பெறுவதற்காக கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த முன்னெடுப்பின் வாயிலாக பெராங் பெசார், மெடிங்லி, காலவே, செட்ஜிலி ஆகிய நான்கு தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்களான 404 பேர் மலிவு விலை வீடுகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணையமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு கூறினார்.

இந்த குடியிருப்பாளர்கள் அனைவரும் இவ்வளவு நாட்களாக டெங்கில், தாமான் பெர்மாத்தாவில் உள்ள தற்காலிக குடியிருப்பில் தங்கியிருந்தனர். இன்று நாம் அம்பாங் தெனாங் பி.பி.ஆர். வீடமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக ஒப்படைத்துள்ளோம். முன்பு சைம் டார்பி நிறுவனத்திற்குச் சொந்தமான அம்பாங் தெனாங் தோட்டப் பாட்டாளிகள் இங்கு வசித்து வந்தனர் என்று அவர் சொன்னார்.

மடாணி அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடு காரணமாக தோட்டப் பாட்டாளிகளின் பத்தாண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள பி.பி.ஆர். மாதிரி வீட்டைப் பார்வையிட்டப் பின்னர் சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட் உரிமையாளர்ளுக்கு  சாவிகளை வழங்கும் பணி இவ்வாண்டிற்குள் பூர்த்தியாகும் என்றும் பின்னர் அவர்கள் இங்கு குடியேறலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த தோட்டத் தொழிலாளர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 750 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒற்றை மாடி தொடர் தரை வீடுகளை நிர்மாணிக்கும் பணி கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தேதி தொடங்கியது. இந்த  வீடமைப்புத் திட்டத்திற்கான நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழ் கடந்த 2024 டிசம்பர் 31ஆம் தேதி வழங்கப்பட்டது.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் நான்கு வீடுகள் மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அய்மான், இந்த வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள பி.பி.ஆர். அறங்காப்பு நிதியிலிருந்து 8 கோடியே 80 லட்சம் வெள்ளி பயன்படுத்தப்பட்டது என்றார்.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் சமூக மண்டபம், பொழுதுபோக்கு பூங்கா, திறந்த வெளி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடமைப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு விழுக்காடு வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாகும். அவர்கள் 20,000 வெள்ளியைச் செலுத்தினால் போதும், எஞ்சிய 50,000 வெள்ளி அரசின் உதவித் தொகையாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.