கோத்தா பாரு, ஜன. 14- சாலை விபத்தில் சிக்கிய வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றியதில் அதன் ஓட்டுநர் கருகி மாண்டார். இச்சம்பவம் குவா மூசாங், ஜாலான் பண்டார் உத்தாமாவில் நேற்று மாலை நிகழ்ந்தது.
முகமது பாஷிர் சே அலி (வயது 36) மற்றும் அவரின் மனைவி மூர்னி முகமது நோர் (வயது 37) பயணம் செய்த புரோட்டோன் சாகா கார் தொயோத்தா ஹைலக்ஸ் காருடன் மோதி தீப்பற்றியதாக குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் நோர் அஜிசி சோ நோ கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 5.18 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்புக் குழுவினர் பத்து நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்தனர் என்று அவர் சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த போது கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதையும் அதன் ஓட்டுநர் இருக்கையில் ஆடவர் ஒருவர் சிக்கிக் கொண்டிருப்பதையும் கண்டனர். அக்காரிலிருந்து ஓட்டுநரின் மனைவி லேசான காயங்களுடன் காரிலிருந்து வெளியேறினார் என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்பு வீரர்கள் காரில் ஏற்பட்ட தீயை அணைத்து அதில் சிக்கிக் கொண்டிருந்த ஆடவரை மீட்டனர். இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட தொயோத்தா ஹைலக்ஸ் வாகனத்திலிருந்த ஓட்டுநர் மற்றும் இரு பயணிகளுக்கு சொற்ப காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக குவா மூசாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த விபத்து நிகழ்ந்ததை உறுதிப்படுத்திய குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.








