உலு சிலாங்கூர், ஜன. 13- கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உலு பெர்ணமின் கம்போங் செலிசெக் மற்றும் கம்போங் செரிகலா குடியிருப்பாளர்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் 25,000 வெள்ளி மதிப்பிலான ரொக்க மற்றும் பொருளுதவியை வழங்கியது.
இந்த உதவித் திட்டத்தின் வாயிலாக 47 குடும்பங்களுக்கு ரொக்கமாக 500 வெள்ளியும் மேலும் 200 பேருக்கு உணவுக் கூடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டதாக எம்.பி.ஐ. அறவாரியத்தின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
கடந்தாண்டு ஆகஸ்டு மாத தொடக்கத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுக் கூடை மற்றும் 100 வெள்ளி ரொக்கத்தை நாங்கள் வழங்கினோம். இன்று ஒவ்வொரு குடும்பத்தின் சுமையையும் குறைக்க மீதமுள்ள 400 வெள்ளியை ஒப்படைக்கிறோம்.
இந்த நிதியை வழங்குவதற்கு முன்னர் ஆவணச் செயல் முறையை முடிக்க எங்களுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. இந்த நன்கொடை வெள்ளத்தை எதிர்கொண்டவர்களின் சுமையைக் குறைக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, உலு பெர்ணம் செலாத்தான், சுங்கை செலிசெக் பள்ளி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் அவர் கலந்து கொண்டார்.
வீடுகளில் 0.3 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் புகுந்ததால் 50 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 143 குடியிருப்பாளர்கள் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.







