செம்பூர்ணா, ஜன. 13- மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை
விபத்தில் ஆண் குழந்தை உள்பட அறுவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சோகச் சம்பவம் களும்பாங்-செம்பூர்ணா- தாவாவ் சாலையில் நேற்று
மாலை நிகழ்ந்தது.
இந்த விபத்தில் மூன்று ஆடவர்கள், ஒரு பெண்மணி, ஒரு சிறுமி மற்றும்
ஒரு கைக்குழந்தை ஆகியோர் உயிரிழந்தாக செம்பூர்ணா தீயணைப்பு
மற்றும் மீட்பு துறையின் தலைவர் மஸ்லான் செர்மான் கூறினார்.
ஆறு பேர் பயணம் செய்த புரோடோன் வீரா கார், நான்கு சக்கர இயக்க
வாகனம் மற்றும் எம்.பி.வி. எனப்படும் பல்நோக்கு வாகனம் சம்பந்தப்பட்ட
விபத்து தொடர்பில் காவல் துறைக்கு நேற்று மாலை 4.58 மணியளவில்
புகார் கிடைத்ததாக அவர் சொன்னார்.
நான்கு சக்கர இயக்க வாகனத்தில் பயணம் செய்த நால்வரும் எம்.பி.வி.
வாகனத்தில் இருந்த நால்வரும் இவ்விபத்தில் காயமின்றித் தப்பினர்.
மொத்தம் 15 பேர் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தனர் என்று அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைகாக இந்த மீட்பு
நடவடிக்கை மாலை 6.16 மணிக்கு முடிவுக்கு வந்தது என்று அவர்
சொன்னார்.
இந்த மீட்பு நடவடிக்கையில் செம்பூர்ணா தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் பங்கேற்றதாகக் கூறிய அவர்,
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு
வருகின்றனர் என்றார்.


