குவாந்தான், ஜன. 12- பெக்கான், நெனாசி-ரொம்பின் சாலையில் கம்போங் செம்பாயான் அருகே நேற்றிரவு நிகழ்ந்த கோர சாலை விபத்தில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புரோட்டோன் வீரா ஏரோபேக் கார் மற்றும் நிசான் லிவினா பல்நோக்கு வாகனம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த விபத்து தொடர்பில் நேற்றிவு 7.15 மணிக்கு தாங்கள் தகவலைப் பெற்றதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் அகமது ஃபாடில்லா கூறினார்.
இதனைத் தொடர்ந்து நெனசாசி மற்றும் கோல ரொம்பின் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 23 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தை அடைந்த போது ரொம்பினிலிருந்து நெனாசி நோக்கிச் சென்று கொண்டிருந்த புரோட்டோன் வீரா காரும் எதிர்த்திசையில் ரொம்பின் நோக்கிச் சென்று கொண்டிருந்த நிசான் லிவினா காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது தெரிய வந்தது என்றார் அவர்.
இந்த விபத்தின் விளைவாக புரோட்டோன் வீரா காரில் பயணம் செய்த ஆடவர், பெண்மணி மற்றும் ஒரு கைக்குழந்தை உள்பட மூன்று சிறார்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
நிசான் லிவினா காரில் பயணம் செய்த இருவர் காயங்கள் காரணமாக ரொம்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்களும் சவப்பரிசோதனைக்காக ரொம்பின் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன என்றார்.








