ஈப்போ, ஜன. 8- உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பேராக் மாநிலப் பிரிவு நேற்று ஸ்ரீ இஸ்கந்தர் மற்றும் தைப்பிங்கில் மேற்கொண்ட இரு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் போலியானவை என சந்தேகிக்கப்படும் பிரபல முத்திரைகளைக் கொண்ட சலவை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனையில் பிரபல வர்த்தக முத்திரைகள் தவறான முறையில் பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படும் 393 போலி சலவை சவர்க்காரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் இயக்குனர் டத்தோ கமலுடின் இஸ்மாயில் கூறினார்.
வர்த்தக முத்திரைக்கு உரிமையான நிறுவனத்தின் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அனைத்து சவர்க்காரங்கள் மீதும் பூர்வாங்க ஆய்வு மேற்கொண்ட நிலையில் அந்த வளாகம் 2019ஆம் ஆண்டு வர்த்தக முத்திரை சட்டத்தின் 102 (1)(சி) பிரிவின் கீழ் குற்றத்தைச் செய்துள்ளதாக நம்பப்படுகிறது என அவர் சொன்னார்.
மேல் விசாரணைக்காக தொடர்புடைய அனைத்து பொருட்களும் ஆவணங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. நாங்கள் சோதனை செய்த இரண்டு வளாகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் விலை 7,124.27 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வர்த்தக முத்திரை உரிமையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தனது தனப்பு உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் முத்திரைப் பெயர் கொண்ட போலிப் பொருட்களின் விற்பனைக்கு எதிராக குறிப்பாக பேராக்கில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கையை தமது தரப்பு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.


