பெட்டாலிங் ஜெயா, ஜன. 1- தாமான் மேடான் சட்டமன்றத் தொகுதியில் வசிப்பவர்கள் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த ஐ.எஸ்.பி. முன்னெடுப்பின் கீழ் 40 க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளதாகவும் அவற்றின் வாயிலாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.
எங்களிடம் பல உதவித் திட்டங்கள் உள்ளன. ஆனால் பலர் அதனை அறிந்திருக்கவில்லை. உதாரணமாக, வாரிசான் அனாக் சிலாங்கூர் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு தலா100 வெள்ளி சேமிப்பை வழங்குகிறது.
மாதம் 300 வெள்ளி வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கும் பிங்காஸ் திட்டம் மற்றும் பெடுலி சேஹாட் எனப்படும் சிலாங்கூர் சுகாதார உதவிக்கான ஆரோக்கியப் பராமரிப்புத் திட்டத்தையும் மாநில அரசு கொண்டுள்ளது.
எனவே இந்த ஐ.எஸ்.பி. உதவிக்கு இணையம் வழி விண்ணப்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அனைத்து உதவிகளையும் சரிபார்த்து பொருத்தமானவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
இன்று இங்கு தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் திட்டத்தின் (தாவாஸ்) கீழ் 350 உறுப்பினர்களுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கும் நிகழ்வின் போது அவர் இவ்வாறு கூறினார்
இதுவரை, சிலாங்கூர் அரசு ஆண்டுக்கு 60 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் 46 நலத் திட்டங்களை ஐ.எஸ்.பி. முன்னெடுப்பின் கீழ் அமல்படுத்தி வருகிறது
10.8 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் பிங்காஸ் திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது.
மாதம் 5,000 வெள்ளி மற்றும் அதற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 300 வெள்ளியை வழங்க இத்திட்டம் வகை செய்கிறது.








