கோலாலம்பூர், டிச. 29- தொடர் மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கிளந்தான் மற்றும் பகாங்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்பாசன மற்றும் வடிகால் துறை (ஜே.பி.எஸ்.) கணித்துள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் உள்ள உள்ள 11 மாவட்டங்களில் 10 அதாவது தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, பாசீர் பூத்தே, பாச்சோக், தானா மேரா, மாச்சாங், கோல கிராய், ஜெலி, குவா மூசாங் ஆகியவை பாதிக்கப்படும் பகுதிகளாகும் என்று இன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட பூர்வாங்க வெள்ள முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பகாங் மாநிலத்தின் குவாந்தான், பெக்கான், ரொம்பின், ஜெராண்டூட் மற்றும் மாரான் ஆகிய ஐந்து மாவட்டங்களை வெள்ளம் தாக்கும் என கணிக்கப் பட்டுள்ளது.
நதிப் படுகையில் குறிப்பிடத்தக்க மழை தொடர்ந்து பெய்யும் படசத்தில் ஜே.பி.எஸ். நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்பதோடு வெள்ள எச்சரிக்கைகளை புதுப்பிக்கும்.
இந்த வெள்ளக் கணிப்பு எதிர்பார்த்த தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ நிகழலாம். அனைத்து பேரிடர் மேலாண்மை துறையினர், குடியிருப்பாளர்கள், குறிப்பாக வெள்ளம் எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெள்ளம் தொடர்பான தற்போதைய தகவல் மற்றும் எச்சரிக்கைகளை publicinfobanjir.water.gov.my இணையதளம் மற்றும் PublicinfoBanjir முகநூல் பக்கம் மூலம் பெறலாம்.








