ஷா ஆலம், 28- மூல நீர் ஆதாரம் மாசுபடுவதிலிருந்து பாதுகாப்பதற்காக அம்பாங் ஜெயா, தாசேக் பாண்டான் பெர்டானா ஏரியில் பொது மக்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் இதன் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் ஆர். மோகன்ராஜ் கூறினார்.
இந்த ஏரியில் மீன் பிடிப்பதற்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. எனினும், மாசுபடுவதிலிருந்து நீர்த்தேக்கங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த முடிவைத் தொடர்ந்து மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு பலகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பொது மக்கள் இந்த உத்தரவை பின்பற்றும் அதேவேளையில் நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் இளைஞர், சமூகம் மற்றும் நில வடிவமைப்புத் துறையும் அமலாக்கப் பிரிவும் அந்த ஏரியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மீன்பிடித் தடையை மீறுவோரின் மீன்பிடி சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.








