ஷா ஆலம், டிச. 25- சிலாங்கூர் அக்ரோ ஃபெஸ்ட் (எஸ்.ஏ.எஃப்.) 2025 வேளாண் விழா அடுத்தாண்டு ஆகஸ்டு மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. உணவு வேளாண் துறையை மேம்படுத்தும் நோக்கிலான இந்த நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்மான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழா மோரிப் வட்டாரத்தில் நான்கு நாட்களுக்கு நடத்தப்படும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்கு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த விழாவில் தாவரக் கண்காட்சி உள்பட பல சிறப்பு அங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
இந்த வேளாண் விழாவின் ஒரு பகுதியாக 2024/2025ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் அக்ரோ ஐகோன் சாதனையாளர் நிகழ்வும் நடத்தப்படும் எனக் கூறிய அவர், அதில் வெற்றி பெற்ற சாதனையாளர் பெயரும் அறிவிக்கப்படும் என்றார்.
இந்த வேளாண் விழா கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வேளையில் அந்த விழாவை பெரிய அளவில் அடுத்தாண்டு மீண்டும் நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக இஷாம் முன்னதாக கூறியிருந்தார்.
வேளாண் தொழில்முனைவோர் தங்களின் உற்பத்தி பொருள்களை பிரபலப்படுத்துவதற்குரிய தளமாக இந்த அக்ரோ ஃபெஸ்ட் விழா விளங்கும். அதே சமயம், விவசாயத் துறையில் இளம் தொழில்முனைவோரின் பங்கேற்பை அதிகரித்து புதிய வேளாண் தொழில்முனைவோரை உருவாக்குவதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.








