ஷா ஆலம், டிச. 25- சிலாங்கூர் மாநில மகளிர் சமூக நல மன்றத்தின் (பெக்காவானிஸ்) ஏற்பாட்டில் வசதி குறைந்த 2,220 பேருக்கு பெருநாள் உதவிகள் வழங்கப்பட்டன.
வசதி குறைந்த தரப்பினரின் சுமையைக் குறைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்காக 4461,000 வெள்ளி ஒதுக்கப்பட்டதாக பெக்காவானிஸ் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார்.
இவ்வாண்டு சீனப்புத்தாண்டின் போது 600 பேருக்கு 162,000 வெள்ளியும் நோன்புப் பெருநாளின் போது 760 பேருக்கு 140,600 வெள்ளியும் தீபாவளியின் போது 860 பேருக்கு 159,100 வெள்ளியும் உதவி நிதியாக வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த உதவித் தொகை மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஏக காலத்தில் விநியோகிக்கப்பட்டதாக கூறிய அவர், இத்திட்டம் மூலம் ஒவ்வொருவரும் தலா 150 வெள்ளியைப் பெற்றனர் என்றார்.
இது தவிர, மாநில அரசின் துணை நிறுவனங்கள் வழங்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் கூடுதல் உதவியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நிகழ்ச்சிகளின் போது வழங்கப்படுகின்றன. என்று சிலாங்கூர் டிவியின் ஏற்பாட்டிலான ஹாய் சிலாங்கூர் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.
பெக்காவானிஸ் தொடங்கப்பட்டது முதல் ஸியாரா மெடிக், ஸியாரா காசே, நோன்பு கஞ்சி வழங்குவது, மெர்டேக்கா குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








