ஷா ஆலம், டிச. 21- ‘துவான் ஹருண்‘ தவறான சமயப் போதனை இயக்கத்தில் தொடர்பை வைத்திருந்ததாக எண்மர் மீது இங்குள்ள ஷரியா உயர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி ஜைனால் அபிடின் காசிம் முன்னிலையில் தங்களுக்கு எதிராக தனித்தனியாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை மூன்று ஆண்கள் மற்றும் எட்டு பெண்கள் அடங்கிய அந்த எண்மரும் மறுத்து விசாரணை கோரினர்.
கடவுளின் மறுவடிவம் என தங்களைக் கூறிக் கொண்டதோடு ஹருண் கடவுள் என்றும் டெலிகிராம் உரையாடல் குழுவில் தவறான தகவல்களைப் பதிவிட்டதாக அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஷரியா மாநிலச் சட்டத்தின் (சிலாங்கூர்) 46பி பிரவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அதிகப்பட்சம் 5,000 வெள்ளி அபராதம், மூன்று ஆண்டுகளுக்கும் மேற் போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் இரு நபர் உத்தரவாதத்துடன் வாய்மொழி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
இதனிடையே, அந்த எட்டு பேரும் சிப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கியில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில இஸ்லாமிய விவகாரத் துறையின் இயக்குநர் (ஜாய்ஸ்) டத்தோ முகமது ஷாய்ஜியான் அகமது அறிக்கை ஒன்றில் கூறினார்.
அக் கும்பலின் கடந்த கால செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் துவான் ஹருண் இயக்கத்தின் போதனைகளுடன் தொடர்புடையதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.








