MEDIA STATEMENT

பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் தொடர்பில் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை- டாக்டர் குணராஜ் தகவல்

20 டிசம்பர் 2024, 9:03 AM
பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் தொடர்பில் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை- டாக்டர் குணராஜ் தகவல்

(ஆர்.ராஜா)

கிள்ளான், டிச. 20- இங்குள்ள பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிக்கு அடையாளம் காணப்பட்டுள்ள மாற்று இடத்தில் புதிய பள்ளியை நிர்மாணிப்பது குறித்து விவாதிப்பதற்காக அடுத்த மாதம் சந்திப்புக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

கல்வியமைச்சு, பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் வட்டார தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

இப்பள்ளியின் வகுப்பறை ஒன்றில் அண்மையில் உள்கூரை இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் நேற்று கல்வியமைச்சரின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி கே.சி. லோர் அவர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது இப்பள்ளிக்கு மாற்று இடத்தில் கட்டிடம் நிர்மாணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளியில் வகுப்பறை ஒன்றின் உள் கூரை அண்மையில் சரிந்து விழுந்தது. இதன் தொடர்பான சர்ச்சைகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கல்வியமைச்சரின் சிறப்பு அதிகாரியை நேற்று நாங்கள் சந்தித்தோம்.

இச்சந்திப்பின் போது பள்ளி தொடர்பில் பல விவகாரங்கள் அவரிடம் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக புதிய பள்ளி கட்டுவதற்கான முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 24 வகுப்பறைகளுடன் கூடிய புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு கிட்டத்தட்ட 2 கோடியே 40 லட்சம் வெள்ளி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அரசின் பகுதி உதவி பெறும் பள்ளியாக உள்ளதால் கட்டிடத்தை சொந்தமாக கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் இதில் அரசாங்கத்தின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக கல்வியமைச்சுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது என அவர் சொன்னார்.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் இது தொடர்பில் கல்வியமைச்சு அதிகாரிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவுள்ளது.

ஆகவே இப்பள்ளி பிரச்சினையை சர்ச்சையாக்காமல் புதிய பள்ளியை கட்டுவதற்கான முயற்சியில் ஒன்றிணைவோம் என்று குணராஜ் கேட்டுக கொண்டார்.

தற்போது சுமார் ஒரு ஏக்கரில் தனியார் நிலத்தில் அமைந்திருக்கும் சுமார் 102 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இப்பள்ளிக்கு சுமார் 800 மீட்டர் தொலைவில் 6.34 ஏக்கர் நிலம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது. அந்த இடத்தில் புதிய பள்ளியை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.