ரியாத், டிச. 16 - ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலன் குன்றுகளில் குடியிருப்புக் கட்டிடங்களை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் திட்டத்திற்கு சவூதி அரேபியாவும் கட்டாரும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு தனது கண்டனத்தை மீண்டும் தெரிவித்த சவூதி வெளியுறவு அமைச்சு, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான சிரியாவின் வாய்ப்புகளை இத்திட்டம் சீர்குலைக்கும் எனக் கூறியது.
இஸ்ரேலிய அத்துமீறல்களை கண்டிக்குமாறு அனைத்துலக சமூகத்திற்கு அழைப்பு விடுத்த சவூதி அரேபியா, சிரியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.
அதேசமயம், கோலான் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட அரபு சிரிய நிலம் என்றும் அமைச்சு அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியது.
இஸ்ரேலின் இந்த முடிவு, சிரிய நாட்டு பிரதேசங்கள் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புத் தொடரில் இதுவொரு புதிய அத்தியாயம் என்பதோடு அப்பட்டமான அனைத்துலகச் சட்ட அத்துமீறல் என கத்தார் வெளியுறவு அமைச்சு வர்ணித்தது.
இவ்விவகாரத்தில் அனைத்துலகச் சமூகம் தனது சட்ட மற்றும் தார்மீக பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான அவசரத் தேவையையும் அந்நாடு கோடிட்டுக் காட்டியது.
சிரிய நாட்டு பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்தவும் அனைத்துலக சட்டபூர்வ தீர்மானங்களுக்கு இணங்கும்படி இஸ்ரேலை வலியுறுத்தும் அதேவேளையில் அந்நாட்டின் சந்தர்ப்பவாத திட்டங்களுக்கு எதிராக ஒற்றுமையைக் காட்டவும் வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.
சிரியாவின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவான தனது உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்திய கட்டார், சிரியாவில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தி அந்நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து பிராந்திய மற்றும் அனைத்துலக முயற்சிகளுக்கும் தனது ஆதரவை
புலப்படுத்தியது.
ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலன் மலையில் இஸ்ரேலிய குடியேற்றக் குடியிருப்பை மேம்படுத்தும் 40 மில்லியன் ஷெக்கல்கள் (4.7 கோடி வெள்ளி ) திட்டத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கம் ஏகமனதாக ஒப்புதல் வழங்கியது.


