ஷா ஆலம், டிச. 15- கெஅடிலான் கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்களுக்கான தேர்தலில் அதிகமான உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக இன்று இங்கு நடைபெற்ற கெஅடிலான் ராக்யாட் கட்சியின் சிறப்பு பேராளர் மாநாட்டில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்த திருத்தத்தின் மூலம் தொகுதி நிலையிலும் உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளதோடு பாலின மற்றும் இன ரீதியான கோட்டா முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்த சட்டத் திருத்தம் அனைவருக்கும் கூடுதல் நீதியை வழங்கும். இந்த நடவடிக்கையின் மூலம் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட அனைத்து உறுப்பினர்களும் வாக்களிப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு தொகுதியில் நடைபெற்ற இந்த சிறப்பு மாநாட்டிற்கு கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எனினும், கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பேராளர்களுக்கு இந்த மாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டது.








