MEDIA STATEMENT

செப்டம்பர் வரை சிலாங்கூரில் வெ.6,680 கோடி முதலீடு பதிவு- வெ.5,500 கோடி இலக்கைத் தாண்டியது

15 டிசம்பர் 2024, 4:50 AM
செப்டம்பர் வரை சிலாங்கூரில் வெ.6,680 கோடி முதலீடு பதிவு- வெ.5,500 கோடி இலக்கைத் தாண்டியது

சுபாங் ஜெயா, டிசம்பர் 15- இவ்வாண்டு  செப்டம்பர் மாத நிலவரப்படி சிலாங்கூர் 6,680 கோடி வெள்ளி  மதிப்பிலான  முதலீட்டைப் பதிவுசெய்துள்ளது.  இவ்வாண்டிற்கான முதலீட்டு இலக்கான  5,500 கோடி வெள்ளியை இந்த    எண்ணிக்கைத் தாண்டி விட்டது.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சு வெளியிட்ட அறிக்கை, சிலாங்கூர் அதிக முதலீடு கொண்ட மாநிலம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்வாண்டின்  முதல் ஒன்பது மாதங்களில் நாடு முழுவதும் 25,400 கோடி வெள்ளி  மதிப்பிலான முதலீட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் வரலாற்றில்  மிக அதிக முதலீடாகும்.

அதே சமயம், 6,680 கோடி வெள்ளியுடன்  அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. கடந்த  செப்டம்பர் இறுதி வரை நாங்கள் 5,500 கோடி வெள்ளி இலக்கைத்  தாண்டிவிட்டோம் என்று அவர்  சொன்னார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற  சிலாங்கூர் மாநில நிலையிலான கிறிஸ்துமஸ் தின திறந்த இல்ல நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போது அவர் இதனைக்  கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு பெருநகர் உள்பட அடுத்த ஆண்டு அல்லது 2026 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்படும்  என எதிர்பார்க்கப்படும் இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின்  (ஆர்.எஸ்.-2) மீது  தற்போது தனது நிர்வாகம் கவனம் செலுத்துவதாக அமிருடின் தெரிவித்தார்.

இந்தத் திட்டமானது சாலைகள், விளக்குகள், வடிகால் போன்ற உள்கட்டமைப்புகளை உள்ளடக்கியது. அதோடு  மட்டுமல்லாமல் புதிய முதலீடுகளை ஈர்க்க பழைய பகுதிகளை மறுவடிவமைப்போம். இதற்கு எங்களுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என அவர் குறிப்பிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் போக்குவரத்து அமைச்சரைச் சந்தித்தோம்.

மாநில அரசின் சிலாங்கூர் ரயில் திட்டத்தை  சபாக் பெர்ணமில் இருந்து சிப்பாங் வரை  இணைக்கும் யோசனை எங்களுக்கு கிடைத்தது என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலம் இதுவரை 259.3 கோடி வெள்ளி வருமானத்தை பதிவு செய்துள்ளதாகவும் இவ்வாண்டிற்கான  வருமான இலக்கான 220 கோடி வெள்ளியை விட 18 சதவீதம் அதிகம் என்றும்  அமிருடின் கடந்த புதன்கிழமை  தெரிவித்திருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.