சபாக் பெர்ணம், டிச. 15- சிலாங்கூரில் தூய்மை தொடர்ந்து பேணிக்காக்கப்படுவதை உறுதி செய்ய மாநிலத்தில் துப்புரவுப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.
இந்த துப்புரவுப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பணியில் ஊராட்சி மன்றங்கள் கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
மாநிலத்தில் குறிப்பாக கிள்ளானில் காணப்படும் தூய்மைப் பிரச்சினை தொடர்பில் மேன்மை தங்கிய சுல்தான் வெளியிட்ட கண்டிப்பு மற்றும் நினைவூட்டலை மாநில அரசு கவனத்தில் கொள்கிறது. இதன் அடிப்படையில் ஊராட்சி மன்றங்களும் கும்புலான் டாருள் ஏஹ்சான் நிறுவனமும் தொடர்ச்சியாக துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதை நான் உறுதி செய்யவிருக்கிறேன்.
அதே சமயம், பொது மக்களும் சுற்றுப்புற தூய்மைப் பராமரிப்பதில் தங்கள் பங்கினை ஆற்ற வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்பதோடு குப்பைகள் இல்லாத பட்சத்தில் கிராமங்களும் கடற்கரைகளும் அழகாக இருக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றார் அவர்.
சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு மற்றும் டூரிசம் சிலாங்கூர் ஊடகவியலாளர்களுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்த மாநிலத்தின் வட பகுதிக்கான சிறப்பு சுற்றுலா நிகழ்வில் டத்தோ இங் இதனைத் தெரிவித்தார்.
கிள்ளான் நகரம் அழுக்கு நிறைந்தும் சீரற்றும் இருப்பது தொடர்பில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கடந்த வாரம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.








