சுபாங் ஜெயா, டிச. 15- தவணை காலம் முடியும் வரை சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகத்தை வழிநடத்தும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா ஆலோசனை கூறியுள்ளார்.
எந்த தரப்பினரின் தொந்தரவும் இன்றி மாநிலம் தொடர்ந்து நிலைத் தன்மையுடனும் சுபிட்சத்துடனும் வழிநடத்தப்படுவதை உறுதி செய்வற்காக மேன்மை தங்கிய சுல்தான் இந்த ஆலோசனையை சில தினங்களுக்கு முன்னர் வழங்கியதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அண்மைய தினங்களில் நான் மேன்மை தங்கிய சுல்தானை சந்தித்தேன். கடவுள் சித்தம் இருந்தால் அதிர்ச்சியூட்டும் பெரிய பிரச்சினைகள் ஏதுவும் இல்லாதிருந்தால் எந்த சிக்கலுமின்றி ஒற்றுமை அரசாங்கமாக நாங்கள் தொடர்ந்து நீடிப்போம் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டிலும் மாநிலத்திலும் நிலைத்தன்மை தொடர்ந்து நீடிக்க எந்த தொந்தரவும் இன்றி ஐந்தாண்டு தவணை காலத்தை முழுமையாக முடிக்கும்படி துவாங்கு என்னைக் கேட்டுக் கொண்டார் என அவர் சொன்னார்.
மேன்மை தங்கிய சுல்தானின் அழைப்பை ஏற்று நான் அவரைச் சந்தித்த போது, எனது பணி முழுமையாக முடிக்கப்படுவதையும் நாட்டின் மற்றும் மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மையையும் உறுதி செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக நாம் வெற்றி பெற்றுள்ளதோடு நல்ல பலன்களையும் கண்டுள்ளோம் என்றார் அவர்.
மாநிலத்தை தொடர்ந்து வழி நடத்தும் தனது கடப்பாட்டை வலியுறுத்திய அமிருடின், பதவியை ஏற்றபோது அளித்த வாக்குறுதியின்படி மாநிலத்தின் நிலைத்தமையை உறுதி செய்ய தொடர்ந்து பாடுபடப் போவதாகச் சொன்னார்.
மாநிலத்தின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படப்போவதாக அண்மைய சில தினங்களாக பரவி வரும் ஆருடங்கள் மக்கள் மனதில் கவலையை ஏற்படுத்தியிருக்கலாம்.
உண்மையில், மாநிலத்தில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நமது சாதனைகளை இதுபோன்ற ஆருடங்கள் வாயிலாக மட்டுமே சீர்குலைக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும் என அவர் சொன்னார்.
அமிருடின் விரைவில் மத்திய அமைச்சரவைக்கு மாற்றப்படுவார் என்றும் மந்திரி புசார் பதவிக்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் தெங்கு அப்துல் அஜிஸ் நியமிக்கப்படுவார் என்றும் அண்மைய சில தினங்களாக ஆருடங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நோக்கத்திற்காக தெங்கு ஸப்ருள் விரைவில் கெஅடிலான் ராக்யாட் கட்சியில் இணைவார் எனவும் கூறப்படுகிறது.








