சுபாங் ஜெயா, டிச. 15 - சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் இங்குள்ள பண்டார் சன்வேயில் நேற்றிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் பொது உபசரிப்பில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
இவ்விழாவில், ஹிஜ்ரா சிலாங்கூர் மற்றும் பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் மூலம் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவு வகைகள் வருகையாளர்களுக்கு பரிமாறப்பட்டன.
ஆக்ட்ஸ் சர்ச் சைகை மொழி நிகழ்ச்சி, டம்பூரின் நடனம், கரோலிங், நியூ லைஃப் கம்யூனிட்டி சர்ச் ஹார்மோனிகா நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு உற்சாகமான நிகழ்வுகள் இந்த திறந்த இல்ல உபசரிப்புக்கு கலகலப்பை ஏற்படுத்தின.
இதற்கிடையில், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சமூகத்தில் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான கடப்பாட்டை வலுப்படுத்த ஐந்து சங்கங்களுக்கு மாநில அரசாங்கம் 32,000 வெள்ளியை வழங்கியுள்ளதாக டூரிசம் சிலாங்கூர் அறிக்கை ஒன்றில் கூறியது.
மாநிலத்திலுள்ள பல்லின சமூகங்களை ஒன்றிணைக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் திட்டங்களைத் தொடங்கவும் மாநில நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அது தெரிவித்தது.
ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் ஊக்குவிப்பதற்கான முயற்சியாக இந்த முன்னெடுப்பு விளங்குகிறது. மேலும் ஒற்றுமை மற்றும் கலாச்சார செழுமையின் சின்னமாக சிலாங்கூர் தொடர்ந்து முன்னேறுவதை உறுதிப்படுத்துகிறது என்று அது கூறியது.








