குளுவாங், டிச. 13- இரு ஆடவர்களைக் கைது செய்ததன் மூலம்
வீட்டிலிருந்து செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் போதைப் பொருள்
விநியோகக் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இங்குள்ள தாமான் பெர்மாத்தாவில் கடந்த சனிக்கிழமை
மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 11 லட்சம் வெள்ளி
மதிப்பிலான எக்ஸ்டஸி பவுடர் பறிமுதல் செய்யப்பட்டதாக குளுவாங்
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமது நோ கூறினார்.
காலை 10.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் ஏழு
கிலோ எக்ஸ்டஸி போதைப் பவுடர் கைப்பற்றப்பட்ட வேளையில் இரு
கார்கள் மற்றும் 600 வெள்ளி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன என்று
அவர் தெரிவித்தார்.
இந்த போதைப் பொருளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அந்த
வீட்டிற்கு நேரில் வருவது வழக்கம் எனக் கூறிய அவர், இந்த போதைப்
பொருள் பல்வேறு சுவைகளைக் கொண்ட மெதுபானங்களில்
கலக்கப்பட்டிருக்கும் என்றார்.
இந்த போதைப் பொருளை அக்கும்பல் ஜோகூர் பாருவிலிருந்து
பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எவ்வளவு நாட்களாக
இந்த போதைப் பொருள் விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
என்பதைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என
குளுவாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
அந்த போதைப் பொருளைப் பதப்படுத்தும் நடவடிக்கை அந்த வீட்டிலேயே
மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. கைதான இரு ஆடவர்களுக்கும் போதைப்
பழக்கம் இருப்பதும் சோதனையில் கண்டறியப்பட்டது. அவ்விருவருக்கும்
எதிராக 1952ஆம் ஆண்டு அபாயகர போதை பொருள் சட்டத்தின் 15(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


