கோலாலம்பூர், டிச.9- காஜாங், ஜாலான் காஜாங் பெர்டானாவில் இன்று காலை நிகழ்ந்த ஆம்புலன்ஸ் உட்பட 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
காலை 9.50 மணிக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காஜாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த போது டோயோட்டா ஹியேஸ் வேன், சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ், ஒரு ஹூண்டாய் ஸ்டேரேக்ஸ் வாகனம் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தை தாங்கள் கண்டதாக அவர் சொன்னார்.
இந்த விபத்தின் விளைவாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தார். அவர் தீயணைப்பு வீரர்களால் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டார். அதே நேரத்தில் மூன்று ஆடவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் லேசாக காயமடைந்தனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
22 முதல் 41 வயதுக்குட்பட்ட அனைவரும் மேல் சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர், சம்பவத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருவதாக குறிப்பிட்டார்.








