சுபாங் ஜெயா, டிச. 9 - தூய்மைப்படுத்துதல், ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் போன்ற பணிகளை உள்ளடக்கிய சுங்கை கிள்ளான் மறுசீரமைப்புத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் தற்போது தாமான் ஸ்ரீ மூடா மற்றும் கோத்தா கெமுனிங் பகுதிகளை உள்ளடக்கிய மூன்றாம் கட்ட அமலாக்கத்தில் உள்ளதாக உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார்.
சுங்கை கிள்ளான் மறுசீரமைப்புத் திட்டம் முடிய இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும். இது தற்போது கட்டம் மூன்றில் பணி நடந்து வருகிறது. மற்ற பகுதிகளுக்கும் இது விரிவாக்கப்படும்.
நாங்கள் மிகப்பெரிய அளவிலான குப்பைகளை எதிர்நோக்கி வருகறோம். ஆற்றின் நான்கு மீட்டர் ஆழத்தில் மூன்று மீட்டர்கள் வரை கழிவுகள் மட்டுமே காணப்படுகின்றன. கைவிடப்பட்ட கார்கள், பெட்டிகள், படுக்கைகள் மற்றும் பல பொருட்களும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று ஸ்ரீ கெம்பாங்கனில் உள்ள சுங்கை குயோவின் துணை நதிகளில் ஒன்றான பண்டாராயா மீன்களை பிடிக்கும் இயக்கத்தைப் பார்வையிட்டப் பின்னர் இஷாம் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
சுங்கை கிள்ளான் மறுசீரமைப்புத் திட்டம் மூன்று முக்கிய பொறியியல் கூறுகளை உள்ளடக்கியுள்ளது.வடிவமைப்பு (நீரியல் மற்றும் ஹைட்ராலிக் ஆய்வு, ஆற்றங்கரை பழுதுபார்க்கும் பணிகள், நிலச்சரிவு பாதுகாப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு தேவைகள் உட்பட), கட்டுமானம் மற்றும் பணிக்கு பிந்தைய பராமரிப்பு ஆகியவையே அந்த மூன்று கூறுகளாகும் என அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை மேற்கொள்ள 70 கோடி வெள்ளி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கோலாலம்பூரில் உள்ள கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து போர்ட் கிள்ளான் வரை வெள்ளம் ஏற்படும் பகுதிகளின் நான்கு முக்கிய தொகுதிகளை உள்ளடகாகிய 12 மண்டலங்களில் அமலாக்கம் காண்கிறது.


