தைப்பிங், டிச. 9- பொது உபயோகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை எந்த தரப்பினரும் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க அவற்றை அரசு பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் படி ஊராட்சி மன்றங்களை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் 20,868 ஹெக்டர் நிலம் பொது தேவை மேம்பாட்டிற்காக ஒதுக்கப் பட்டுள்ளதை நகர மற்றும் கிராம திட்டமிடல் பிரிவின் தரவுகள் காட்டும் வேளையில் அவற்றில் 39 விழுக்காடு இடங்கள் அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
ஊராட்சி அதிகாரிகள் அந்த இடங்களை அரசிதழில் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை நில மற்றும் கனிமவளத் துறையிடம் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த இடங்கள் யாவும் மேம்பாட்டுக்கான அனுமதி கோரி விண்ணப்பித்த போது சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர்கள் வழங்கியவையாகும் என அவர் குறிப்பிட்டார்.
பொது இடங்களக பதிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் பொது பூங்காக்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களை நாம் பதிவு செய்யாவிட்டால் பொறுப்பற்ற தரப்பினர் அவற்றை தவறாகப் பயன்படுத்துவதற்குரிய சாத்தியம் உள்ளது என்று அவர் சொன்னார்.
நேற்று இங்கு நிலவடிவமைப்புத் துறையின் 2024 செந்தோஹான் கெஜயஹான் திட்டம் தேசிய நில வடிவமைப்பு கொள்கை 2.0 ஆகியவற்றைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த பொது இடங்களை சம்பந்தப் பட்டத் தரப்பினர் அடுத்தாண்டு அரசு பதிவேட்டில் இடம் பெறச் செய்து அவற்றை மேம்படுத்துவதற்கு தேசிய நில வடிவமைப்பு துறை மற்றும் ஊராட்சி மன்றங்களிடமிருந்து நிதியைப் பெறுவர் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தேசிய நில வடிவமைப்புத் துறை நாடு முழுவதும் 5 கோடியே 19 லட்சம் வெள்ளி செலவில் 109 நில வடிவமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


