தும்பாட், டிச. 7 - கிளந்தான், திரெங்கானு, கெடா, நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் நேற்றைய நிலவரப்படி 10,272 நீர்வழி நோய்களை சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ளது.
அவற்றில் 6,730 கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள், 3,021 தோல் நோய்த்தொற்றுகள், 298 கடுமையான இரைப்பை குடல் அழற்சி, 190 வெண்படல அழற்சி, 20 சின்னம்மை மற்றும் 13 கை, கால் மற்றும் வாய்ப் புண் நோய் ஆகியவை அடங்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
தற்காலிக நிவாரண மையங்களில் கண்டறியப்பட்ட அனைத்து தொற்று நோய்களும் மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளன என அவர் சொன்னார்.
பொதுமக்கள் அதிகாரிகளின் உத்தரவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு தொற்று நோய்கள், பரவாமலும் விபத்துக்கள், காயங்கள் ஏற்படாமலும் தடுக்க தனிப்பட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எனக் கேட்டுக் கொண்டார்.
பொதுமக்கள் அருகிலுள்ள சுகாதார வசதிகளில் உள்ள மருத்துவர்களிடம் உடனடியாக சிகிச்சை பெறவும் சிகிச்சை பெறுவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள்
என்று அவர் தெரிவித்தார்.
இன்று தும்பாட் இளநிலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே, கிளந்தானில் 77 சுகாதார மையங்கள், திரெங்கானுவில் 30 மையங்கள், கெடாவில் ஒன்பது மையங்கள், நெகிரி செம்பிலான் மற்றும் பகாங்கில் தலா இரண்டு மையங்கள், பேராக்கில் ஒரு மையம் உள்பட மொத்தம் 121 சுகாதார வசதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஜூல்கிப்ளி மேலும் கூறினார்.


