சியோல், டிச. 7- இவ்வாரம் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதன்
மூலம் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியதற்காக தென்
கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மன்னிப்பு கோரியதோடு இத்தகைய
முயற்சியில் இனியும் ஈடுபடப் போவதில்லை என்றும்
வாக்குறுதியளித்தார்.
மிகுந்த வியப்புக்குள்ளான மக்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு
கேட்டுக் கொள்கிறேன் என்று நாடாளுன்றத்தில் பதவி பறிப்புத் தீர்மானம்
கொண்டு வரப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தொலைக்காட்சி
வழி பொது மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறினார்.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாட்டில் இராணுவச்
சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அதனை
நாடாளுமன்றம் ரத்து செய்தப் பின்னர் மக்கள் மத்தியில் யூன்
தோன்றுவது இதுவே முதன் முறையாகும்.
இந்த இராணுவச் சட்ட பிரகடனத்தால் எழுந்துள்ள சட்ட மற்றும் அரசியல்
விளைவுகளை நான் ஒருபோதும் தவிர்க்க முயலமாட்டேன் என்று அவர்
சொன்னார்.
நாட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தனது பதவி
உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் மீதும் முடிவெடுக்கும் பொறுப்பை
தாம் மக்கள் சக்தி கட்சியிடம் தாம் விட்டுவிடுவதாக அவர் குறிப்பிட்டார்.


