கூலாய், டிச.1- செனாய், தாமான் பஹாகியாவில் உள்ள வீடொன்றின்
வரவேற்புக் கூடத்தில் முதியவர் ஒருவர் உடலில் இரத்தக் காயங்களுடன்
இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
அந்த முதியவர் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பது தொடர்பில்
பொது மக்களிடமிருந்து தாங்கள் நேற்று காலை 11.42 மணியளவில்
புகாரைப் பெற்றதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டான்
செங் லீ கூறினார்.
அறுபதேழு வயதான அந்த முதியவர் அவ்வீட்டில் தனியாக வசித்து
வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டிருக்கலாம்
என சந்தேகிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.
வீட்டிலிருந்து எந்த பொருளும் காணாமால் போகவில்லை என்பது
தொடக்கக்கட்ட சோதனையில் கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், இந்த
சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


