(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 24- சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய தொழில்
முனைவோருக்கு உதவ ஒரு கோடி வெள்ளியில் சிறப்பு நிதியை மாநில
அரசு அடுத்தாண்டு தொடங்கவுள்ளது.
இந்த நிதி மித்ரா, தெக்குன் நேஷனல் மற்றும் சிலாங்கூர் மாநில அரசின்
ஹிஜ்ரா அறவாரியம் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன்
மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

இம்மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்தின் எதிர்காலத்தையும்
தலைவிதியையும் மாற்றியமைக்கும் நோக்கில் பிரத்தியேகமாக
உருவாக்கப்படும் திட்டமாக இது விளங்குகிறது என்று சொந்தோசா
தொகுதி ஏற்பாட்டில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற தீபாவளி பொது
உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசாங்கம் ஆட்சிபுரியும் காரணத்தால்
இரு அரசுகளும் கூட்டாக இணைந்து சமூக மேம்பாட்டிற்கான
திட்டங்களை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு தற்போது கிட்டியுள்ளது
என்று அமிருடின் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத்திற்கான நிதி குறைந்து விட்டது
என்ற குறைகூறல் நிலவுகிறது. தற்போது மாநில மற்றும் மத்திய அரசுகள்
ஒன்றுபட்டு செயல்படும் காரணத்தால் மித்ரா மற்றும் தெக்குன் போன்ற
அமைப்புகளுடன் நாம் இணைந்து செயல்படுவதற்குரிய வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. முன்பு கட்சி வேறுபாடு காரணமாக நம்மால் ஒன்றுபட்டு
செயல்பட முடியாத சூழல் நிலவியது.
இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள
மித்ராவுக்கு ஆண்டுதோறும் 10 கோடி வெள்ளி வழங்கப்படுகிறது. ஆகவே,
மித்ரா மற்றும் தெக்குன் அமைப்புகளுன் பேச்சு நடத்தி மாநில அரசின்
சார்பாக கணிசமான பங்களிப்பை வழங்குவதன் வாயிலாக ஒரு கோடி
வெள்ளி ஒதுக்கீட்டில் இந்திய சமூகத்திற்காக பிரத்தியேக நிதியை
உருவாக்கவிருக்கிறோம். மாநில அளவில் குறைவாக இருக்கும்
பங்களிப்பையும் இதன் மூலம் ஈடு செய்வோம் என அவர் குறிப்பிட்டார்.

இப்போது நாம் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசங்கமாக உள்ளதால்,
மித்ரா, தெக்குன் அமைப்புகளுடனும் அமைச்சர்களுடனும் நாம் கலந்து
பேசி திட்டங்களை இணைந்து மேற்கொள்வதன் மூலம் மாநிலத்தின்
நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வோம் என்றார் அவர்.
உதவி தேவைப்படுவோருக்கு 2,000 அல்லது 3,000 வெள்ளியை
வழங்கினால் மட்டும் போதாது. மாணவர்களின் கல்வி,
தொழில்முனைவோரின் மேம்பாடு, வழிபாட்டுத தலங்களில் பாதுகாப்பை
தொடர்ந்து உறுதி செய்வதுதான் நமது நோக்கம். கடந்த 13ஆண்டுகளாக
நாம் இதைத்தான் செய்து வருகிறோம் அமிருடின் குறிப்பிட்டார்.








