ஷா ஆலம், நவ. 22- தகுதி உள்ள சிலாங்கூர் மக்களுக்கு காப்புறுதி பாதுகாப்பை வழங்கக் கூடிய சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டம் (இன்சான்) நிறுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக “கைராட் டாருள் ஏஹ்சான்“ எனப்படும் மரண சகாய நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
குறைவான பதிவு மற்றும் கட்டண விகிதம் உள்ளிட்டப் பிரச்சினைகளை இன்சான் எதிர்கொண்டதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் மாநில சட்டமன்றத்தில் இன்று கூறினார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாநிலத்தின் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியது போல், சிலாங்கூர் மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் மரண சகாய நிதித் திட்டம் (கைராட் டாருள் ஏஹ்சான்) அறிமுகப்படுத்தப்படும் என அவர் சொன்னார்.
மாநில மக்களுக்கு சமூக நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கும் மாநில அரசாங்கத்தின் கடப்பாட்டை இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது என்று அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று தாமான் மேடான் உறுப்பினர் டாக்டர் அலிஃப் பஹார்டின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த இன்சான் காப்புறுதி திட்டம் பிறந்து 30 நாள் ஆன குழந்தை முதல் எண்பது வயது வரையிலானவர்களுக்கு காப்புறுதி பாதுகாப்பை வழங்கி வருகிறது. இந்த காப்புறுதி திட்டத்தின் கீழ் மரண மற்றும் நிரந்தர முடத்தன்மைக்கான இழப்பீடாக 10,000 வெள்ளி வரை வழங்கப்படுவதோடு நல்லடக்கச் சடங்கிற்கு 1,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.








