ஷா ஆலம், நவ. 22- சபாக் பெர்ணத்திலிருந்து சிப்பாங் வழியாக நெகிரி செம்பிலான் வரை செல்லக்கூடிய 211 கிலோ மீட்டர் இரயில் திட்டம் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை உள்ளடக்கியுள்ளது.
நெகிரி செம்பிலான் முதன் மேற்கு துறைமுகம் மற்றும் கிள்ளான் துறைமுகம் வரையிலான இந்த திட்டத்தில் சரக்கு தடத்தை அடையாளம் காணும் பணியை மலேயன் இரயில்வே (கே.டி.எம்.பி.) மேற்கொள்ளும் என்று போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
சிலாங்கூரில் தொழில்துறையை ஆதரிப்பதற்கும் நீண்ட கால அடிப்படையில் உள்நாட்டு மற்றும் அந்நிய தரை துறைமுக பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் தேவையான பரிந்துரைகள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படும் என்று அவர் சொன்னார்.
சிறப்பான மற்றும் விரிவான பொது போக்குவரத்து சேவையை பொது மக்களுக்கு வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் இத்திட்டம் விளங்குகிறது. இந்த திட்டத்தின் ஆக்ககரமான மேம்பாட்டை உறுதி செய்வதற்கு ஆய்வு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
திறன்மிக்க சரக்கு இரயில் சேவையின் வாயிலாக சரக்கு பட்டுவாடா சேவையை விரிவாக்க முடியும். சரக்கு பட்டுவாடா சேவையை சாலையிலிருந்து இரயில் தடத்திற்கு மாற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க இயலும் என்று அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று 2025ஆம் ஆண்டு விநியோக மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்டுமானச் செலவினம், பராமரிப்பு, நில மீட்பு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய இந்த இரயில் திட்ட ஆய்வு வரும் ஜனவரி மாதம் முழுமை பெறும் எனவும் அவர் சொன்னார்.








