ஷா ஆலம், நவ. 22- சிலாங்கூர் மக்கள் சொந்த வீடுகளைப் பெறுவதில்
உதவும் நோக்கில் கடந்த பத்தாண்டு காலத்தில் மாநிலம் முழுவது 254,606
சிலாங்கூர் கூ வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் 41,196 வீடுகளை உள்ளடக்கிய 128 திட்டங்கள் முழுமை பெற்று
வீடுகளுக்கான சாவிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட
வேளையில் 26,667 வீடுகளை உள்ளடக்கிய 63 திட்டங்கள் கட்டுமானத்தில்
உள்ளதாக வீடமைப்பு மற்றும் கலாசாரத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
இது தவிர, மேலும் 186,743 வீடுகளை உள்ளடக்கிய 257 திட்டங்கள்
திட்டமிடல் கட்டத்தில் உள்ளன. ரூமா இடாமான் மற்றும் ரூமா
ஹராப்பான் பிரிவுகளைச் சேர்ந்த இந்த வீடுகளுக்கு மக்கள் மத்தியில்
பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் சொன்னார்.
மக்களின் தேவையை நிறைவு செய்யும் மாநில அரசின் முயற்சிகளுக்கு
அனைத்து தரப்பினரிடமிருந்து நல்ல ஆதரவு கிடைப்பதை இந்த வரவேற்பு
புலப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று 2025ஆம் ஆண்டிற்கான விநியோக
மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர்
இத்தகவலை வெளியிட்டார்.
கட்டுபடி விலையிலான வீடுகளை மேம்பாட்டாளர்கள் அதிகளவில்
நிர்மாணிப்பதை ஊக்குவிக்கும் வகையில் மேம்பாட்டாளர் கட்டணத்தை
100 விழுக்காடு அகற்ற ஆட்சிக்குழு கடந்த அக்டோபர் மாதம் ஒப்புக்
கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கட்டண விலக்களிப்பு நிரந்தரமானது. கட்டுபடி விலை வீடுகளை
கட்டுவதற்கான செலவினத்தை இந்த நடவடிக்கை குறைக்கும் என அவர்
சொன்னார்.
மாநில அரசின் வீடமைப்புத் திட்டங்களில் ஒன்று மட்டுமே
பிரச்சினைக்குரியதாக உள்ளதாக கூறிய அவர், மோரிப்பில்
நிர்மாணிக்கப்படும் 778 வீடுகளை உள்ளடக்கிய ரூமா சிலாங்கூர் கூ
செந்தோரியா திட்டமே அதுவாகும் என்றார்.








