ஷா ஆலம், நவ. 22- சிலாங்கூர் எப்.சி. கால்பந்து விளையாட்டாளர் ஃபைசால் அப்துல் ஹலிம் மீது கடந்த மே மாதம் எரிதிராவகம் வீசப்பட்டச் சம்பவம் தொடர்பில் காவல் துறையிடமிருந்து இதுவரை எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை.
மாநில சட்டமன்ற சபாநாயகர் காவல் துறைக்கு கடிதம் அனுப்பிய போதிலும் அந்த சம்பவம் தொடர்பான விசாணையின் சமீபத்திய நிலவரங்கள் குறித்து எதுவும் தெரியவில்லை என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
இது வரை ஃபைசால் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணையின் முடிவு எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இவ்விவகாரம் தொடர்பில் மாநில சட்டமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான கடிதத்தை சபாநாயகர் அனுப்பியுள்ளது குறித்த தகவல் மட்டுமே கடைசியாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி அதன் முடிவுகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும்படி நாங்கள் கேட்டுக கொண்டிருந்தோம். எனினும், சம்பந்தப்பட்டத் தரப்பினரிடமிருந்து இதுவரை எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று சுங்கை ராமால் தொகுதி உறுப்பினர் ஷாபி ங்கா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பயங்கரவாத மற்றும் தீவிரவாதப் போக்குடையை அந்த சம்பவத்தை கண்டிக்கும் அவசரத் தீர்மானத்தை மாநில சட்மன்றம் கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் மீது ஐந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு அது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மே மாதம் 5ஆம் தேதி கோத்தா டாமன்சாராவிலுள்ள பேரங்காடி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்கள் ஃபைசால் மீது எரிதிராவகத் தாக்குதல் நடத்தியதில் அவர் உடலில் நான்காம் கட்டத் தீக்காயங்களுக்கு உள்ளானார்.








