ஷா ஆலம், நவ. 22- அடுத்தாண்டு சுமார் 156 கோடி வெள்ளி செலவில் 114 மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு சிலாங்கூர் மாநிலத்தில் அமல்படுத்தவுள்ளது..
அவற்றில் 112 கோடி வெள்ளி செலவிலான புதிய 93 திட்டங்களை கிராம மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு மேற்கொள்ளவுள்ள வேளையில் மேலும் 24 திட்டங்கள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியாகும் என்று கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.
இது தவிர எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் வாயிலாக சிலாங்கூரிலுள்ள 21 திட்டங்கள் 34 கோடி வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறிய அவர், அவற்றில் 12 திட்டங்கள் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய அவ்விரு அமைச்சுகளுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று 2025ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, உலு பெர்ணம் பகுதியில் நடமாடும் கிளினிக் மற்றும் போக்குவரத்து ஒருங்கமைப்பை உருவாக்குவது தொடர்பான பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினரின் பரிந்துரையை தாங்கள் பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக ரிஸாம் தெரிவித்தார்.
சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதி பெற இயலாத நிலையிலிருக்கும் புறநகர் மக்கள் விஷயத்தில் உரிய கவனம் செலுத்துவது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினரை நேரில் சந்தித்து விவாதிக்கவிருக்கிறேன் என்றார் அவர்.








