ஷா ஆலம், நவ. 21- எதிர்பாராத சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உணவுகளைச் சேமித்து வைப்பதற்கு உருவாக்கப்படும் சிலாங்கூர் உணவுக் கிடங்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள மக்களுக்கு குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுவைச் சேமித்து வைக்கும் திறன் கொண்ட அந்த கிடங்கு கோல சிலாங்கூரில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
தற்போது நாங்கள் அந்த நிலத்தின் மண்டலத் தகுதியை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். நிலம் தகுதி மாற்றம் செய்யப்பட்டவுடன் ஆர்.எப்.பி. எனப்படும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான அழைப்பு விடுக்கப்படும். இந்த கிடங்கை நாம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தயார் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த உணவுக் கிடங்கு திட்டம் இரு கட்டங்களை உள்ளடக்கியுள்ளது. முதல் கட்டமாக இடத்தை வாடகைக்குப் பெற்று சிகிஞ்சானிலிருந்து அரிசியையும் கோலக் கிள்ளானிலிருந்து இறைச்சியையும் சேமித்து வைப்போம். நிரந்த கிடங்கு அமைக்கப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் தொடக்க கட்ட நடவடிக்கை இதுவாகும் என்றார் அவர்.
முன்னதாக அவர், சிலாங்கூர் உணவுக் கிடங்கிற்கு 10 லட்சம் கிலோ இறைச்சியை விநியோகிப்பது தொடர்பில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்திற்கும் (பி.கே.பி.எஸ்.) எல்லானாசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கை பார்வையிட்டார்.
பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்களின் போது மாநில மக்களுக்கு தேவையான உணவுகளை விநியோகிக்கப்பதற்கு ஏதுவாக உணவு சேமிப்புக் கிடங்குத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக இஷாம் முன்னதாக தெரிவித்திருந்தார்.








