(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 20- மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசியத்
தேவைகளை இலவசமாக வழங்குவதன் மூலம் வழிபாட்டுத் தலங்கள்
எதிர்நோக்கும் நிதிச் சுமையை குறைப்பதில் அரசு உதவ முடியும் என
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
குறிப்பாக, சிலாங்கூர் அரசு மாநிலத்திலுள்ள அனைத்து வழிபாட்டுத
தலங்களுக்கும் குடிநீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை பரிசீலிக்க
வேண்டும் என அவர் அவர் கேட்டுக் கொண்டார்.
மறுசீரமைப்பு பணிகள், வழிபாட்டு நடவடிக்கைகள் மற்றும் சமய
வகுப்புகளை நடத்துவது போன்றவற்றை மேற்கொள்ள வழிபாட்டுத்
தலங்களுக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டிய
அவர், இச்சூழலில் மானியத்தைக் குறைக்கும் பட்சத்தில் மாற்று
நடவடிக்கையாக இலவசமாக குடிநீரை வழங்குவது போன்ற திட்டங்களை
அமல்படுத்தலாம் என்றார்.
இந்த நடவடிக்கையின் மூலம் வழிபாட்டுத் தலங்களை நிர்வாகம்
செய்வதில் ஏற்படக்கூடிய நிதிச்சுமையை ஓரளவு குறைக்க இயலும்
மாநில சட்டமன்றத்தில் 2025ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா
மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அவர்
தெரிவித்தார்.
இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி 60 லட்சம்
வெள்ளியிலிருந்த 40 லட்சம் வெள்ளியாக குறைக்கப்பட்டது குறித்து பல
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்த முடிவை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதோடு
முடிந்தால் பழைய ஒதுக்கீட்டை நிலை நிறுத்த வேண்டும். அல்லது
உண்மையில் நிதியுதவி தேவைப்படும் ஆலயங்களுக்கு உதவும் வகையில்
சிறப்பு கோரிக்கையின் அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்கீட்டைச்
செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.








